Saturday, April 7, 2012

மன்னிக்கணும் மக்களே !

ரொம்ப நாளு எதுவும் எழுதாம லீவ் விட்டதுக்கு மன்னிக்கணும் மக்களே.  (இல்ல நாங்க சந்தோஷமா தான் இருந்தோம்னு... யாருப்பா அங்க?) 

பல பிரச்சினைகள் பாஸ்.  முக்கியமா நாம எழுதனும்னு நினைக்கும் போது கரண்டு இருக்க மாட்டேன்னுது.  எப்போ கரன்டு சீராவும்னு அதுக்கே தான் 'வெளிச்சம்'.

முந்தைய ஆட்டோகிராப் பதிவை படிச்சிட்டு பல பேரு 'உனக்கு எதுக்கு இது எல்லாம்?" அப்படீன்னு கேட்டுகிட்டதாலே, அது அப்பீட்டு.

உங்களுக்கு எப்பவாவது வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சா நம்ம சூப்பர் ஸ்டாருக்கு ரொம்பவே சொம்படிச்சி ஒரு வெப்சைட் வருது.  அதை போய் படிச்சீங்கன்னா உங்களுக்கு நல்லா பொழுது போகும்.  அதுவும் அந்த பதிவர் போடுற 'கருத்தாழமிக்க' பதிவுகளுக்கு ரசிகர்கள் போடுற பின்னூட்டம் இருக்கு பாருங்க, அடேங்கப்பா 'சொம்பி' வழியும். வலை தளத்தோட பேர் எல்லாம் சொல்ல மாட்டேன். சூப்பர் ஸ்டார் பேர் சொன்னாலே அது ஒரு தனி வழியில போய் நிக்கும்.


அடுத்த பதிவு வரை உங்களுக்கு புல் என்டேர்டைன்மென்ட் தான். 

Tuesday, January 24, 2012

ஒரு அரைகிழ அம்மணியின் Flashback....வள்ளி படத்து கதையை எழுதினவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிஒரு பெண் எப்படி வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்ளனும்னு  அவர் மனசுல விழுந்த ஒரு புள்ளியை ரொம்ப நாள் அசைப்போட்டு, ஒரு கதையா உருவாக்குனதா ஒரு முறை சொன்னாருஅதே மாதிரி நானும்,  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த மாதிரி சில விஷயங்கள் நடந்தால்... அப்படீன்னு  நினைச்சு நான் உருவாக்குன கதை தான் இப்போ நீங்க படிக்க போறீங்க.   இது ஏற்கனவே வந்த ஒரு படத்து கதை போல இருக்கேன்னு நீங்க பீல் பண்ணா அது தற்செயல் தான்.


கதைய படிச்சுட்டு, நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு, படம் எடுக்கறேன்னு இயக்குனர்கள்தயாரிப்பாளர்கள் எல்லாம் சண்டை போட்டுக்க வேணாம்திறமை உள்ளவங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு உண்டு.

இந்த கதை, ஒரு பெண், டைட்டானிக் (கிழ) ஹீரோயின் மாதிரி, அவங்க அரை கிழம் ஆன பின்னால தன் வாழ்க்கையை திரும்பி பாக்குற மாதிரி பிளாஷ்பேக்கொசுவத்தி சுருளை காமிரா முன்னாடி ஸ்லோவா சுத்தி விடுங்க. இனிமே வர்றது எல்லாம் அந்த அரை கிழ அம்மணியோட வார்த்தைகள் தான்.

"கோயம்பேடு பஸ் ஸ்டாப்புல உக்காந்துக்கிட்டு இருக்கேன்வாழ்க்கையில, பல சிக்கல்கள், ஏமாற்றங்கள் எல்லாம் கடந்து, எனக்கும் ஒரு வழியா என் 45 வயசுல ஒரு நாதாரியோட கல்யாணம் நடக்க போகுதுவேற வழி இல்லே. இவனையும் விட்டா நான் கடைசி காலத்துல யாரும் கவனிக்காம விட்ட நசுங்கி போன சொம்பு மாதிரி ஆயிடுவேன்அதான் அமுக்கி போட்டுட்டேன்

இப்போ என் கல்யாண invitation  குடுக்கத்தான் நான் ஒன்னாங்கிளாஸ் படிச்ச ஸ்கூல் இருக்குற ஊரு, பத்தாம் கிளாஸ் படிச்ச பக்கத்து ஊரு, காலேஜ் படிச்ச பக்கத்து ஸ்டேட் எல்லாம் போய், அங்க நாம ரூட்டு போட்டு சிக்காதவனுங்க, சிக்குனாலும் எஸ்கேப் ஆனவுங்க எல்லாரையும் என்னோட கல்யாணத்துக்கு அழைக்க போறேன்.

முதல்ல எங்க ஊருபஸ்சுல இருந்து இறங்கி ஊருல கால் வச்ச உடனே, பையை தொறந்து கண்ணாடி எடுத்து மாட்டிகிட்டேன். பட்டைய கிளப்புற வெயில். புழுதி பறக்குது.  ஆனா கூட எங்க இருந்தோ நம்ம மேல தென்றல் வீசுற மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு மூச்சை  ஒரு தடவை ஆழமா இழுத்து விடுறேன்ஒரு பீல் வரணும் இல்லையா.  இப்போ ஆம்பிளைங்க கோரசா "ஆ... ஆஆஆ" ன்னு BGM .  

ஊரு எல்லையிலேயே ஒருத்தன் என்னை பார்த்து பரிதாப்பட்டு, "அம்மா வாங்க TVS 50 இல உங்களை கூட்டிக்கிட்டு போறேன்னான். நான் வேணாம்னு சொல்லிட்டு,   மெதுவா நடக்க ஆரம்பிச்சேன்.  'நெஞ்சம் மறப்பதில்லை....." அப்படீன்னு சுசீலா அம்மாவோட பாட்டு வேற காத்துல மிதந்து வருதுஒரே பீலிங்க்ஸ் தான்.

மொதல்ல நான் Invitation குடுக்க போனது என்னோட ஒன்னாங்கிளாஸ் படிச்ச நாராயணன் வீட்டுக்குஇவன் தான் என் மனசுலே மொதல்லே காதல் என்ற அந்த அற்புதமான பீலிங்கை எனக்கு அஞ்சு வயசுலேயே ஏற்படுத்தினவன்இவங்க வீட்டுல கொருகலிக்கா மரம் இருக்கும். தினமும் கொருகலிக்கா பறிச்சுக்கிட்டு வந்து எனக்கு குடுப்பான்மத்தவங்களுக்கு ஒரு காய் குடுத்தான்னா, எனக்கு மட்டும் ரெண்டு குடுப்பான்அப்பவே என்னை அவன் லவ் பண்றான்னு புரிஞ்சிக்கிட்டேன்ஒரு நாள் மெதுவா நானே அவன் கிட்டே 'ப்ரொபோஸ்' பண்ணேன்பயபுள்ள முடியாதுன்னு சொல்லி இருக்கலாம், அதை விட்டுட்டு நேரா டீச்சர் கிட்ட போய், "டீச்சர், இவ என்னை பார்த்து லவ் யூ ன்னு சொல்றா டீச்சர் ன்னு போட்டு குடுத்துட்டான்அன்னைக்கு டீச்சர் பிரம்பை எடுத்து என்னை பட்டக்ஸ்லேயே வெளு வெளு ன்னு வெளுத்துட்டாங்க. அன்னைக்கே அந்த பிஞ்சு காதல் பிஞ்சி போச்சு.

இப்போ கொசுவத்தி ரிவர்ஸ்ல சுத்தணும்நேரா அவன் வீட்டுக்கு முன்னாடி போய் நின்னேன். சப்பிப் போட்ட மாங்கொட்டை தலையா ஒரு பெரியவரு வீட்டுல இருந்து வெளிய போய்க்கிட்டு இருந்தாரு.  

"இங்க நாராயணன்னு....." 

"நான் தான்.....நீங்க?".

"என்னை ஞாபகம் இல்லை? உன்கூட ஒன்னாங்கிளாஸ் படிச்சேனே!" 

"நீ.... அஞ்சலை தானே?"  அப்படீன்னு என் பழைய பேர ஞாபகப்படுத்திச்சு அந்த மாங்கொட்டைநான் இப்போ என் பேர இங்கிலீஷ்ல ஒரு எழுத்தை கட் பண்ணி, ஸ்டைலா அஞ்சலின்னு மாத்தி வச்சுருக்கேன்னு அவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லேஅப்போ பார்த்து உள்ள இருந்து ஒரு 18 வயசு பொண்ணு வெளிய வந்து, "யாருப்பா இது?" அப்படீன்னு கேக்க, இந்த நாரவாயி நாராயணன், "கண்ணு இது என்கூட ஒண்ணாப்புலே இருந்து படிச்சது." அப்படீன்னு ஆரம்பிச்சு பழசை எல்லாம் சொல்றேன்னு, நான் வகுப்புல பாவாடையில ஒன்னுக்கு போனதுல இருந்து, இந்த நாய் கிட்ட  லவ் யூ சொல்லி பட்டக்ஸ்லே அடி வாங்குனவரைக்கும் விலாவாரியா அள்ளி விட்டுக்கிட்டு இருக்கான்அப்புறம் அவன் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு வேற சொன்னான் பாருங்கவாழ்கையே வெறுத்துப் போயிட்டேன்எல்லாத்தையும் சொல்லிட்டு, "ரொம்ப நாளு கழிச்சு ஊருக்கு வந்து இருக்கியே என்னா விஷயம்"னு கேக்கறான்

பையில இருந்து invitation எடுத்தேன்அதுக்குள்ள அந்த அவசரத்துக்கு பொறந்த அரை வேக்காடு, "அடடே, கல்யாணமா? உன் பொண்ணுக்கா, பையனுக்கான்னு?" கேக்குறான். அவனுக்காக என் வாழ்க்கை வரலாறை கொஞ்சம் சோகம் பிழிய டகால்ட்டி திரைக்கதை விட்டுஅதனால தான் கல்யாணம் லேட்னு சொல்லி, "கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும்னு" Invitation குடுத்தேன்

நாராயணன் அதை வாங்கும் போது, அவன் முகத்துல தெரிஞ்சுது குசும்பா, இல்லை யாரு அந்த துரதிர்ஷ்டசாலி அப்படீன்னு காமிச்ச பீலிங்கான்னு எனக்கு புரியலை. Invitation ஐ வாங்கிக்கிட்டு முதல் மரியாதை சிவாஜி, வயசான ராதாவை பாக்குற மாதிரி ஒரு பீலிங்கோட என்னை பார்த்து, "கண்டிப்பா வரேன் அஞ்சலை" ன்னு மறக்காம என் பழைய பேர, பேஸ் வாய்ஸ்ல சொல்றான் அந்த வெந்த மண்டையன்.

அடுத்து என்கூட பத்தாம் கிளாஸ் படிச்ச குமரேசன் வீட்டுக்கு, மேல வானத்தை பார்த்துக்கிட்டே பீலிங்கோட வாக்கிங்....... இப்போ மறுபடியும் ஆம்பிளைங்க கோரசா  "ஆ....ஆஆஆ" ன்னு பேக் கிரவுண்டுல கொட்டாவி விடுற மாதிரி BGM....

அங்க "நடந்தது என்ன?" ........ அடுத்த பதிவுல....

Friday, January 6, 2012

ஜில் ஜில் ஜிகர்தண்டா ...

கொஞ்ச நாளைக்கு முன்னால, நானும் என் நண்பர் ஒருத்தரும், சும்மா எங்கேயாவது சுத்திட்டு வரலாம் அப்படீன்னு பிளான் எல்லாம் பண்ணாம கிளம்பினோம்.  நண்பர் இருக்கறது சேலத்துல. அங்கே இருந்து பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கிட்டு, எங்கே போலாம்னு யோசிச்சு, சரி மதுரைக்கு மொதல்ல போயிட்டு அங்க இருந்து அடுத்த கட்ட பயணத்தை யோசிப்போம்ன்னு ஒரு வழியா முடிவு பண்ணி, மதுரை பஸ்ல ஏறி பயணத்தை துவக்கினோம்.

மதுரை வந்து சேர்ந்தப்போ நைட்டு மணி 8 . அங்கே இருந்து மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்து, கன்னியாகுமரி போவோம்னு முடிவு செஞ்சோம். பஸ்சுக்கு காத்துக்கிட்டு இருக்கையில, நமக்கு பக்கத்துலேயே, மதுரை பேமஸ் ஜில் ஜில் ஜிகர்தண்டா கடை ஒன்னு இருந்துச்சு.  மதுரை வந்து ஜிகர்தண்டாவை குடிக்காம போனா ஜென்ம சாபல்யம் கிடைக்குமா?  ஜிகர்தண்டாவை செய்யும் போதே நாக்குல மட்டும் இல்ல, உடம்பு பூராவும் ஜொள்ளு ஊருதுன்னா மிகை இல்லை.

முதல்ல ரோஸ் சிரப், அப்புறம் கொஞ்சம் கடல் பாசி போடுறாங்க.அப்புறம், கொஞ்சம் பால், சக்கரை எல்லாம் போட்டு ஒரு மிக்சிங்.அதுக்கு மேல வனிலா ஐஸ் கிரீம் டாப்பிங்.

ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.   


ஸ்பூன்ல ஐஸ் கிரீம், பாசியை மிக்ஸ் பண்ணி எடுத்து வாயில போட்டு,  கொஞ்சம் கொஞ்சமா அது தொண்டைக்கு உள்ள கரையும் போது, அடேங்கப்பா....   

யாரு இப்படி ஒரு அட்டகாசமான காம்பினேஷன் கண்டு பிடிச்சாங்கன்னு தெரியல.  அபாரம்.  ஒரு பழைய காப்பி விளம்பரத்துல தேங்காய் சீனிவாசன், மனோரமா கிட்ட காப்பி செய்யற விதத்தை ரசிச்சு சொல்லிட்டு கடைசியில, "தேவாம்ருதமா இருக்கும்டி" அப்படீன்னு முடிப்பாரு.  ஜிகர்தண்டாவும் அப்படி ஒரு தேவாம்ருதம் தாங்க. மதுரைக்கு போனா நீங்க ஜிகர்தண்டாவை குடிச்சிட்டு தான் அடுத்த வேலை பார்க்கணும்.

ஜிகர்தண்டாவை ஒரு 'கட்டிங்' போட்டுட்டு, கன்னியாகுமரி பஸ் ஏறி உக்காந்ததும், ஜன்னல் ஓர ஜில் காத்து, வயித்துக்குள்ள ஜிகர்தண்டா ஜில் எல்லாம் சேர்ந்து, ஆனந்தமான தூக்கம்.

அப்படியே கன்னியாகுமரி, நாகர்கோவில் பத்மநாபபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திரும்பவும் மதுரை மார்கமா 'ஒரு மார்கமா' வந்து சேர்ந்தோம்.  அதை பத்தி எல்லாம் அப்புறம் சொல்றேன்.

Friday, December 30, 2011

நன்றி 2011.... நல்வரவு 2012...

2011 விடைபெறும் கடைசி தினம் இன்று.  2012 க்கான நல்வாழ்த்துக்கள்.  ஒவ்வொரு நொடியும் நாம் கற்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணத்தையும், கற்பதற்கான வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு, உங்கள் பார்வையை மாற்றிப் பாருங்கள், நல்லவை அழகாகவும், அல்லவை அனுபவமாகவும் தோன்றும். Arnold Fox & Barry Fox எழுதியுள்ள "The Miracle of Positive Thinking" என்ற புத்தகத்தில், ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். உலகில் நல்ல அனுபவம், கெட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. வெறும் அனுபவம் தான்.  நல்லதாகவோ, கெட்டதாகவோ அந்த அனுபவம் மாறுவதற்கு, நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை பொறுத்தே அமைகிறது.  2012 ல் நமக்கு ஏற்படும் எல்லா அனுபவத்தையும் நல்லதாகவே எதிர்கொள்வோமே.

புத்தாண்டின் பொழுதில் இந்த பாடலை கேளுங்கள்.  நாளைய பொழுது நல் பொழுதாக நம் எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.  ஜேசுதாசின் அந்த கணீர் குரலும், இசைஞானியின் தாலாட்டும் இசையும், வாலியின் எளிமையான வார்த்தைகளும் நம் நெஞ்சை தொட்டு ஒரு புத்துணர்வை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Thursday, December 15, 2011

நினைவுகளை தாலாட்டும் சில பெண் குரல் பாடல்கள்

சில பாடல்கள் காலம் கடந்தும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.  அதிலும் எனக்கு சில பெண் குரல் பாடல்கள் மீது தீரா காதலே உண்டு.  இந்த பாடல்கள் அனைத்தும் பல்வேறு சூழலில் பாடுவது போல் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு மென் சோகம் இருப்பது இழையோடுவது போலவே இருக்கும்.  அது தான் அந்த பாடல்களின் அழகோ என்று கூட எனக்கு தோன்றும்.

காலை பணியில் ஆடும் மலர்கள்


'காயத்ரி' படத்தில், இசைஞானியின் இசையில், சுஜாதா பாடும் இந்த பாடல் ஒரு கிளாசிக்.  "காயம் பட்ட மாயம்" என்று சுஜாதா ஏக்கத்தோடு பாடும் வரியில் நிஜமாகவே அந்த மென்சோகம் தெரியம்.புத்தம் புது ஓலை வரும்

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.  இன்றும் கணிசமான மக்கள், இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் மண்ணுக்குள் வைரம் திரை படத்தின் மூலம் அறிமுகமான தேவேந்திரன் இந்த படத்தில் எல்லாப் பாடல்களையும் பட்டை கிளப்பி இருப்பார். சித்ராவின் குரலில் "புத்தம் புது ஓலை வரும்" என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த வயலின் பிட்டிலேயே, கதாநாயகியின் மனதை அழகாய் வெளிப்படுத்திவிடுவார்.  அதன் பிறகு வரும் அந்த புல்லாங்குழல் ஒரு ஹைக்கூ. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி, காதலனுக்காக காத்திருந்து பாடும் இந்த பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இருக்கும்.


மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே

நண்டு படத்தில் வரும் இந்த பாடலை நான் எங்கே கேட்டாலும், நின்று கேட்டுவிட்டு தான் போவேன்.   சிவசங்கரியின் கதையை மகேந்திரன் இயக்கி இருப்பார்.  அருமையான கதைகள் எல்லாம் படமாய் வெளி வந்த காலம் அது.  இந்த பாடலில் உமா ரமணன் குரலை கேட்கும் போதெல்லாம் எனக்குள் சிலிர்க்கும்.  சில நாள் என்னை அறியாமல் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தியிருகிறேன். அமைதியான இரவில் இந்த பாடலை கேளுங்கள்.  உங்கள்  தாயின் தாலாட்டாய் இது இருக்கும். இசைஞானியின் இந்த பாடல் ஒரு மயிலிறகின் வருடல்.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


'குழந்தையும் தெய்வமும்' படத்தில், MSV இசையில்,  P சுசீலா அவர்கள் பாடும் இந்த பாடல் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு பாடல்.  ரொம்ப வருடத்துக்கு முன் டிவியில் ஏதோ ஒரு பாடல் போட்டியில் ஒரு 7 வயது பெண் குழந்தை இந்த பாட்டை பாடியது.  அன்றிலிருந்து இந்த பாடல் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.  பாடல் வரிகள் ஏதோ அறிவுரை போல தோன்றினாலும், பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இழைந்து இருக்கும்.  இரட்டை வேடத்தில் குட்டி பத்மினி க்யூட். நேற்றும் இந்த பாடலை நெஞ்சு நெகிழ கேட்டேன். சுசீலாம்மா நீங்க ஒரு Legend .  இந்த பாடலை கேளுங்கள், பெண் குழந்தைகள் மீது உங்களுக்கு இன்னும் அன்பு கூடும்.ராசாவே உன்னை நம்பி

இது நிஜமாகவே ஒரு மென் சோகப் பாடல்.  ஜானகியின் குரலில் துவங்கும் ஆலாபனையிலேயே பெண்ணின் ஏக்கம் சோகமாய் காற்றில் கலக்கும்.  கிராமத்து பெண்ணின் மனச்சுமையை மிக நெகிழ்வாக பாடலாய்  வெளிப்படுத்தி இருப்பார் இசைஞானி. புல்லாங்குழலில் புல்லரிக்க வைப்பார்.  இளையராஜாவை விட்டு பிரிந்ததும், பாரதிராஜாவின் உள்ளத்தை பிரதிபலிப்பது போலக் கூட இந்த பாடல் எனக்கு தோன்றும். இந்த பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் தான் இருப்பதால் இந்த பாடல் வெறும் ஆடியோ தான்.  ஆனால் என்ன இளையராஜாவை பார்த்துக்கொண்டே இந்த பாடலை கேளுங்கள், பாடல் முடிந்ததும் இசைஞானி உங்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாவார். "பழச மறக்கலையே பாவி பய நெஞ்சு துடிக்குது" .....ஹூம்... அந்த பாரதிராஜா எங்கே போனார்?


Saturday, December 10, 2011

பரதநாட்டியம் கத்துக்க போன கமல் ரசிகர்


நம்ம கமல் ரசிகர் ஒரு பயங்கர கமல் வெறியர்.  ஆளு வேற கொஞ்சம் கலரா, நல்ல பாடியோட வேற இருப்பாரு. கமல் பட அறிவிப்பு வெளியான உடனே, கமல் அந்த கேரக்டர்ல வாழறாரோ இல்லையோ நம்ம ஆளு அந்த கமல் கேரக்டர் மாதிரியே வாழ ஆரம்பிச்சுடுவாரு.  உதாரணத்துக்கு வாழ்வே மாயம் வந்த உடனே, கமல் மாதிரியே ரவுண்ட் நெக் T ஷர்ட் எல்லாம் வாங்கி வச்சுட்டாரு.  அது மட்டும் இல்லை, கமல் கடைசியிலே அந்த படத்துல குர்தாவோட தான் இருப்பாரு இல்லையா, அதனால நம்ம ஆளும் குர்த்தா எல்லாம் போட்டுக்கிட்டு தான் கொஞ்ச நாளு திரிஞ்சாரு. ஆனா அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை கமல் மாதிரியே தாடி வெக்க முடியலே.  ஏன்னா நம்ம ஆளுக்கு தாடி மட்டும் ஆட்டு தாடி மாதிரி தான் இருந்தது. அதுல அவருக்கு ரொம்பவே வருத்தம். சரி இந்த டிரஸ் அலப்பறை தான் தொலையுது அப்படீன்னா, பேச்சு, நடக்கறது, பாக்கறது எல்லாமே கமல் மாதிரியே பண்ணி அதகளம் பண்ணுவாரு.  இன்னும் கொஞ்சம் மேல போய், கமலுக்கு படத்துல பிரண்ட்ஸ் வருவாங்க பாருங்க, அதே மாதிரியே எங்களையும் ட்ரீட் பண்ணுவாரு.  அவரு கமல்னா நாங்க எல்லாம் அவருக்கு அல்லக்கைங்களாம் .

இப்படிப்பட்ட ரசிகர் இருக்கும் போது, எங்களை பத்தி எல்லாம் நினைச்சு பார்க்காம கமல் 'சலங்கை ஒலி' படம் எடுத்துட்டாரு. அந்த படத்தை கமலுக்காவே ஒரு ஆறு தடவை, அப்புறம் நம்ம கமல் ரசிகருக்காகவே இன்னொரு ஆறு தடவை பார்த்தேன். படம் வந்த நாள்ல இருந்து சூன்யம் வச்ச சூனா தானா மாதிரியே நம்ம ஆளு திரிஞ்சிக்கிட்டு இருந்தாரு.  எப்போ அவரு வீட்டுக்கு போனாலும் கையை வச்சு அபிநயம் எல்லாம் பிடிச்சிக்கிட்டு இருப்பாரு.  எங்களுக்கு கொஞ்சம் திகிலாவே இருந்தது.

ஒரு நாளு ரொம்ப சீரியஸா, "நான் பரதம் கத்துக்க போறேன்" அப்படீன்னாரு. எங்களுக்கு கமலை நினைச்சு கோவப் படறதா, பரதத்தை நினைச்சு வருத்தப் படறதா, எங்களை நினைச்சு நொந்துக்கறதான்னு தெரியலே.  அப்படி, இப்படீன்னு தேடி ஒரு பரத நாட்டிய டீச்சரையும் கண்டு பிடிச்சாரு.  அவங்க அப்பத்தான் கல்யாணமான ஒரு இளம் பெண்.  கிடா மாதிரி வளர்ந்து இருக்குற நம்ம ஆளுக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுக்கறதுக்கு அவங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.  நம்ம கமல் ரசிகரும் நாட்டியம் மட்டுமே வாழ்க்கையினுடைய உயிர் மூச்சா எடுத்துக்கிட்டு கத்துக்கணும்னு கிளம்பிட்டாரு.  எங்களையும் கம்பெனிக்கு கத்துக்க வாங்கடான்னு எவ்வளவோ கேட்டு பார்த்தாரு.  பரதம் மேல எங்களுக்கு ரொம்ப மரியாதையும், எங்க மேல எங்களுக்கே அவ்வளவு நல்ல அபிப்ராயமும் இல்லாததாலே நாங்களும் எஸ்கேப், பரத நாட்டியமும் தப்பிச்சுது.  ஆனா எங்க நட்பு வட்டத்துக்கு வெளியே இருந்து ஒரு பலியாடு வந்து மாட்டிகிச்சு.

அவரும் ஒரு கமல் ரசிகர்.  நம்ம ஆளு ஏத்தி விட்ட ஏத்துல அவரும் களத்துல குதிக்க ரெடி ஆயிட்டாரு. ரெண்டு பேரும் போய் கமல் போட்டு இருந்த மாதிரியே வெள்ளை கலர்ல குர்தா எல்லாம் தைச்சுக்கிட்டு வந்தாங்க.  அதை போட்டுக்கிட்டு ரெண்டு பெரும் கிளாசுக்கு சைக்கிள்ளே டபுள்ஸ் போற அழகே அழகு.  கமலுக்கு சலங்கை ஒலியில சரத் பாபு மாதிரி நம்ம புது நண்பர் நம்ம ஆளுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டாரு.

ஒரு நாளு நம்ம ஆளு வீட்டுல பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நாங்க எல்லாரும் தான் ஆடியன்ஸ். அப்போ பார்த்து அவங்க மாமா காளஹஸ்தியில இருந்து நம்ம ஆளு வீட்டுக்கு வந்தாரு.  அவங்க பெண்ணை அவரு நம்ம ஆளுக்கு தான் கல்யாணம் கட்டி குடுக்கணும்னு பிளான்ல இருந்தாரு.  நம்ம ஆளு அவங்க மாமா உள்ள வர நேரம் பார்த்து சலங்கை ஒலியில கமல் கல்யாண மண்டபத்துல ஆடுற "பால கணக மய" பாட்டை அப்படியே கமல் மாதிரியே தன்னை மனசுல நினைச்சுக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தாரு.  மாமா கதவை தொறந்துக்கிட்டு உள்ள வர்ற நேரம் பார்த்து காசட்ல ஜானகியம்மா, "ரா ரா...ரா ரா..." அப்படீன்னு உருகி உருகி பாடுற லைன்.  நம்ம ஆளு அதுக்கு கரெக்டா கதவை பார்த்து அபிநயம் பிடிக்கிறாரு.  உள்ள வந்த மாமாவை பார்த்து "ரா..  ரா.." (தெலுங்குல 'வாடா...')  அப்படீன்னு கூப்பிடுற மாதிரியே இருந்துச்சி.  மாமா அப்படியே ஆப் ஆயி, மருமகனுக்கு என்ன ஆச்சோ தெரியலயேன்னு முழிக்கிறாரு.  மாமாவை பார்த்ததும் நம்ம ஆளும், டர் ஆயி, அப்படியே ஸ்டில் ஆயிட்டாரு.  கொஞ்ச நேரம் ஒரு இனம் புரியாத அமைதி. நாங்களும் நைசா வெளிய வந்துட்டோம்.

வெளிய வந்ததும் நம்ம NP சொல்றாரு, "அவங்க மாமா அவரு பொண்ணுக்கு வேற பைய்யன பார்பாருன்னு தான் எனக்கு தோணுது" அப்படீன்றான்.

ஆனா நல்ல காலம் சலங்கை ஒலிக்கு அப்புறம் கமல் வேற படங்கள் நடிச்சதால, நம்ம ஆளும் கேரக்டரை மாத்திக்கிட்டாறு, நாங்களும் தப்பிச்சோம், பரத நாட்டியமும் பொழைச்சுது, அவங்க மாமாவும் அவரு பெண்ணையே நம்ம ஆளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாரு.

ஆனா ஒண்ணுங்க, அந்த பாட்டு ஒரு எவர் கிரீன் கிளாசிக்.  இளையராஜாவின் இசையும், கமலும், மஞ்சு பார்கவியும் ஆடுறதும், ஜெயப்ரதா ஒளிஞ்சு இருந்து கமலை போட்டோ பிடிக்கறதும், அவங்க அம்மா அப்பாவியா உக்காந்து பார்குறதும், அடேங்கப்பா... கே விஸ்வநாத் திரையில காவியம் படைச்சு இருப்பாரு.  ஏன் கமலுக்கு வெறி பிடிச்ச ரசிகர்கள் இருக்காங்க அப்படீன்றதுக்கு இந்த பாட்டு ஒரு சோறு பதம்.  நீங்களும் ஒரு தடவை அந்த பாட்டை பாருங்க, கமலை உங்களுக்கு இன்னும் பிடிக்கும்.


Tuesday, December 6, 2011

நம்மூர் பட அபத்தங்கள்!நம்ம ஊர்ல எடுக்குற படங்கள்ல சில அபத்தக் காட்சிகளை பார்த்துட்டு, இன்னும் எப்போதாண்டா திருந்தப் போறோம்னு தோணும்உங்களுக்கும் பல முறை அப்படி தோணி இருக்கும்எனக்கு பளிச்சுன்னு பட்ட பத்து அபத்தங்கள்.

1 . காமெடின்னு நினைச்சுக்கிட்டு, காலேஜுல பத்து வருஷமா ஒரு சீனியர் பெயில் ஆயி அதே வகுப்புல படிச்சிக்கிட்டு இருக்காருன்னு காட்டுவாங்க.  ‘சச்சின்’ல வடிவேலு மாதிரிபத்தாவது பெயில் ஆனாலே, திரும்ப பள்ளிகூடத்துக்கு போக முடியாது, இதுல காலேஜுல பெயிலாயி அங்கேயே படிக்கிறாங்களாம்பாக்குற நாம தான் முட்டாளா, இல்ல எடுத்த டைரக்டரு தான்  ..........?

2 . 10 செகண்ட் 0 - 60 KMPH speed எடுக்குற கார்ல, வில்லனோட ஆளுங்க, காலி மைதானத்துல முன்னாடி ஓடுற கதாநாயகனையும், அவன் காதலி, பிரண்ட்ஸ், குடும்பம் எல்லாரையும், 5 கிலோ மீட்டர் வரைக்கும், பிடிக்க முடியாம பின்னாடியே துரத்திக்கிட்டே போவாங்க பாருங்க, அது சரியான காமெடி.

3 . கதாநாயகனை பார்த்தவுடனே, கண்டம் துண்டமா வெட்டி போடணும்னு வெறியோட, 10 , 20  பேரோட வர்ற வில்லன், அவனை பார்த்தவுடனே வெட்டி போடாம, ஸ்கூல் பசங்க பிரேயர்ல நிக்கிற மாதிரி அசெம்பிளி ஆகி, நின்னு டயலாக் பேசுறது ஏன்னு தெரியல

4 . அதுக்கு அப்புறம் வில்லன், ஒரு பக்கம் திரும்பி கண்ணு காட்ட, அவுருடைய அடியாளு ஒருத்தர் மட்டும், ஏதோ கிரிகெட்ல, பாஸ்ட் பௌலர் ஓடி வந்து பௌலிங் பண்ணுற மாதிரி "ஏய்....."  அப்படீன்னு கத்திக்கிட்டே ஒரு 100 மீட்டர் ஓடி வருவாருஅதுவரைக்கும் காட்டுத்தனமா துரத்திக்கிட்டு ஓடி வந்த மத்த அடியாளுங்க எல்லாம் பெவிலியன்ல பேட்டிங் போக காத்துக்கிட்டு இருக்குற பேட்ஸ்மேன் மாதிரி, முதல்ல ஓடினவரு கண்டிப்பா அவுட் ஆவாரு, அப்புறம் போய்க்கலாம் ன்ர மாதிரியே நிப்பாங்க.

5 . கத்தியோட, கத்திக்கிட்டே வர்ர அடியாளை, பௌன்சர் பந்துக்கு குனியற பேட்ஸ்மேன் மாதிரியே, குனிஞ்சு, அடியாளோட வயித்துல ஒரு பன்ச் குடுப்பாரு கதாநாயகன்ஒன்னு அடியாளு அந்த ஸ்பாட்லேயே மூச்சு பேச்சு இல்லாம விழுவாரு, இல்லேன்னா சென்னையில விட்ட குத்துக்கு, அங்க இருக்குற டீ கடை, அலுமினிய பாத்திர கடை, செங்கல் சுவரு, விளம்பர  பேனரு, மீன் பாடி வண்டி எல்லாத்தையும் இடிச்சிகிட்டு, ஒடைச்சிகிட்டு,  பறந்து போய், செங்கல்பட்டுல விழுவாரு.

6 . அப்புறம் கூட மத்த அடியாளுங்க எல்லாம் ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சீங்கன்னா நீங்க தமிழ் படமே பார்த்தது இல்லைன்னு தான் அர்த்தம்அப்புறம் கூட ஒவ்வொருத்தரா தான் வரிசையில ஓடி வந்து, கதாநாயகன் விடற குத்துக்கு வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் மார்கமாக ஊருக்கு ஒவ்வொருத்தரா போய் விழுவாங்க.

7 . பத்தாங்கிளாஸ் கூட பாஸ் பண்ணாம வேலை வெட்டியே இல்லாம தறுதலையா சுத்திக்கிட்டு இருப்பாரு கதாநாயகன்அப்பா பார்த்தா ரொம்ப சாதாரணமான வேலையில தான் இருப்பாருஆனா கதாநாயகன் போடுற பேன்ட், சர்ட் எல்லாம் அடேங்கப்பா ரகமா தான் இருக்கும்வெட்டியா, பொறுக்கியா சுத்திக்கிட்டு இருக்குற நம்ம ஆளு மேல, ரிசர்வ்டா, பொறுப்பா, அழகா, பெரிய நிறுவனத்துல நல்ல வேலையில இருக்குற பொண்ணுக்கு தான் காதல் வரும்.   முன்னாடி எல்லாம் கதாநாயகன் ஏழை, ஆனா நல்லவன், பண்புள்ளவன் அப்படீன்னா காதல் வரும்ஆனா இப்பல்லாம் கொஞ்சம் டெவலப் ஆயி, பொறுக்கிங்க, பொறம்போக்குங்க மேல எல்லாம் BE படிச்ச, IT வேலையில இருக்குற பெண்களுக்கு காதல் வரும்.  ஏண்டா ஒரு அளவே இல்லையா?

8 . கதாநாயகன் பெரிய பிசினெஸ்மேனாவோ இல்லேன்னா ஹை டெக் தாதாவாகவோ இருந்துட்டாருன்னா போதும், அவருக்கும், அவரோட அல்லக்கைகளுக்கும் கண்டிப்பா கோட், சூட் தான் காஸ்ட்யூம்கதாநாயகனுக்கு எக்ஸ்ட்ராவா கருப்பு கூலிங் கிளாஸ்அவுரு ஆபீஸ் போனாலும் சரி, ஆய் போனாலும் சரி, அவுரு முன்னாடி நடக்க, அல்லக்கைங்க எல்லாம் பின்னாடி ஒரு லைன்ல தான் வரணும்எக்ஸ்ட்ரா பில்ட்-அப்புக்கு கதாநாயகன் வாயில சுருட்டும், காதுல செல்போனும் வச்சுக்கிட்டு வரணும். செல் போன் பேசறது எல்லாம் ஒரு பில்ட்-அப்புன்னு இன்னும் காட்டுறானுன்களே, கொடுமைடா சாமி.

9 . இந்தியாவுல இருக்குற மிகப் பெரிய நிறுவனம் ஒன்னுக்கு MD யா ஒரு கதாபாத்திரம் இருக்கும். அவங்க கம்பெனியில machine வேலை செய்யிற கீழ் நிலை தொழிலாளிக்கு, அவங்க ஆயா வயசுக்கு வந்துட்டாங்க, அம்மாவுக்கு பேதி, அப்பா மண்டைய போட்டுட்டாரு, அதனால ஒரு நாள் லீவ் வேணும்னா கூட நம்ம MD கிட்ட தான் போய் அழுவாங்க. MD தான் கால் மேல கால் போட்டுகிட்டோ, வாயில பைப் வச்சுக்கிட்டோ, லீவ் குடுப்பேன், குடுக்க மாட்டேன்னு சொல்வாங்க.

10 . நம்ம கதாநாயகருங்க எல்லாம் 'கருத்து கந்தசாமியா' மாறி உபதேசம் பண்ற கொடுமை இருக்கே, 'கொலைவெறி' தான். அதுவும் பொண்ணுங்களுக்கு இவனுங்க குடுக்குற அட்வைஸ், ங்கொய்யால நொய்யரிசி தான். டிரஸ்ஸை இப்படி போடக் கூடாது, ரோடுல ப்படி நடக்கக்கூடாது, ரோஸ் கலர் புடவை கட்டுனா, தலையில கனகாம்பரம் வைக்கணும்வெள்ளிகிழமையான ரெட்டை ஜடை போடணும்னுஇவனுங்க அடுக்கிக்கிட்டே போற அலப்பறைக்கு அளவே கிடையாதுஆனா இவனுங்க மட்டும் இறகு பிச்சி போட்ட கோழி மாதிரி தலையில இருந்து கால் வரைக்கும் ஒரு ஏடாகூட கெட்டப்புல படம் பூரா சுத்துவானுங்கோ.

என்ன படிச்சாச்சா? சிப்பு சிப்பா வந்தாலும், துப்பு துப்பா வந்தாலும் அதை கமெண்டுல போடுங்கோ!