Thursday, December 15, 2011

நினைவுகளை தாலாட்டும் சில பெண் குரல் பாடல்கள்

சில பாடல்கள் காலம் கடந்தும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.  அதிலும் எனக்கு சில பெண் குரல் பாடல்கள் மீது தீரா காதலே உண்டு.  இந்த பாடல்கள் அனைத்தும் பல்வேறு சூழலில் பாடுவது போல் இருந்தாலும் அதில் ஏதோ ஒரு மென் சோகம் இருப்பது இழையோடுவது போலவே இருக்கும்.  அது தான் அந்த பாடல்களின் அழகோ என்று கூட எனக்கு தோன்றும்.

காலை பணியில் ஆடும் மலர்கள்


'காயத்ரி' படத்தில், இசைஞானியின் இசையில், சுஜாதா பாடும் இந்த பாடல் ஒரு கிளாசிக்.  "காயம் பட்ட மாயம்" என்று சுஜாதா ஏக்கத்தோடு பாடும் வரியில் நிஜமாகவே அந்த மென்சோகம் தெரியம்.



புத்தம் புது ஓலை வரும்

பாரதிராஜாவின் வேதம் புதிது படத்தில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.  இன்றும் கணிசமான மக்கள், இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் மண்ணுக்குள் வைரம் திரை படத்தின் மூலம் அறிமுகமான தேவேந்திரன் இந்த படத்தில் எல்லாப் பாடல்களையும் பட்டை கிளப்பி இருப்பார். சித்ராவின் குரலில் "புத்தம் புது ஓலை வரும்" என்ற இந்த பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த வயலின் பிட்டிலேயே, கதாநாயகியின் மனதை அழகாய் வெளிப்படுத்திவிடுவார்.  அதன் பிறகு வரும் அந்த புல்லாங்குழல் ஒரு ஹைக்கூ. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி, காதலனுக்காக காத்திருந்து பாடும் இந்த பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இருக்கும்.


மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே

நண்டு படத்தில் வரும் இந்த பாடலை நான் எங்கே கேட்டாலும், நின்று கேட்டுவிட்டு தான் போவேன்.   சிவசங்கரியின் கதையை மகேந்திரன் இயக்கி இருப்பார்.  அருமையான கதைகள் எல்லாம் படமாய் வெளி வந்த காலம் அது.  இந்த பாடலில் உமா ரமணன் குரலை கேட்கும் போதெல்லாம் எனக்குள் சிலிர்க்கும்.  சில நாள் என்னை அறியாமல் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தியிருகிறேன். அமைதியான இரவில் இந்த பாடலை கேளுங்கள்.  உங்கள்  தாயின் தாலாட்டாய் இது இருக்கும். இசைஞானியின் இந்த பாடல் ஒரு மயிலிறகின் வருடல்.



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


'குழந்தையும் தெய்வமும்' படத்தில், MSV இசையில்,  P சுசீலா அவர்கள் பாடும் இந்த பாடல் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு பாடல்.  ரொம்ப வருடத்துக்கு முன் டிவியில் ஏதோ ஒரு பாடல் போட்டியில் ஒரு 7 வயது பெண் குழந்தை இந்த பாட்டை பாடியது.  அன்றிலிருந்து இந்த பாடல் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.  பாடல் வரிகள் ஏதோ அறிவுரை போல தோன்றினாலும், பாடல் முழுதும் ஒரு மென் சோகம் இழைந்து இருக்கும்.  இரட்டை வேடத்தில் குட்டி பத்மினி க்யூட். நேற்றும் இந்த பாடலை நெஞ்சு நெகிழ கேட்டேன். சுசீலாம்மா நீங்க ஒரு Legend .  இந்த பாடலை கேளுங்கள், பெண் குழந்தைகள் மீது உங்களுக்கு இன்னும் அன்பு கூடும்.



ராசாவே உன்னை நம்பி

இது நிஜமாகவே ஒரு மென் சோகப் பாடல்.  ஜானகியின் குரலில் துவங்கும் ஆலாபனையிலேயே பெண்ணின் ஏக்கம் சோகமாய் காற்றில் கலக்கும்.  கிராமத்து பெண்ணின் மனச்சுமையை மிக நெகிழ்வாக பாடலாய்  வெளிப்படுத்தி இருப்பார் இசைஞானி. புல்லாங்குழலில் புல்லரிக்க வைப்பார்.  இளையராஜாவை விட்டு பிரிந்ததும், பாரதிராஜாவின் உள்ளத்தை பிரதிபலிப்பது போலக் கூட இந்த பாடல் எனக்கு தோன்றும். இந்த பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் தான் இருப்பதால் இந்த பாடல் வெறும் ஆடியோ தான்.  ஆனால் என்ன இளையராஜாவை பார்த்துக்கொண்டே இந்த பாடலை கேளுங்கள், பாடல் முடிந்ததும் இசைஞானி உங்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமாவார். "பழச மறக்கலையே பாவி பய நெஞ்சு துடிக்குது" .....ஹூம்... அந்த பாரதிராஜா எங்கே போனார்?


1 comment:

  1. Super post Gopi, to highlight such songs. In the last 1 month, I have been thinking about the quality of lyrics in female solo songs of Ilayaraja. They are exceptionally good.

    ReplyDelete