Saturday, December 10, 2011

பரதநாட்டியம் கத்துக்க போன கமல் ரசிகர்


நம்ம கமல் ரசிகர் ஒரு பயங்கர கமல் வெறியர்.  ஆளு வேற கொஞ்சம் கலரா, நல்ல பாடியோட வேற இருப்பாரு. கமல் பட அறிவிப்பு வெளியான உடனே, கமல் அந்த கேரக்டர்ல வாழறாரோ இல்லையோ நம்ம ஆளு அந்த கமல் கேரக்டர் மாதிரியே வாழ ஆரம்பிச்சுடுவாரு.  உதாரணத்துக்கு வாழ்வே மாயம் வந்த உடனே, கமல் மாதிரியே ரவுண்ட் நெக் T ஷர்ட் எல்லாம் வாங்கி வச்சுட்டாரு.  அது மட்டும் இல்லை, கமல் கடைசியிலே அந்த படத்துல குர்தாவோட தான் இருப்பாரு இல்லையா, அதனால நம்ம ஆளும் குர்த்தா எல்லாம் போட்டுக்கிட்டு தான் கொஞ்ச நாளு திரிஞ்சாரு. ஆனா அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை கமல் மாதிரியே தாடி வெக்க முடியலே.  ஏன்னா நம்ம ஆளுக்கு தாடி மட்டும் ஆட்டு தாடி மாதிரி தான் இருந்தது. அதுல அவருக்கு ரொம்பவே வருத்தம். சரி இந்த டிரஸ் அலப்பறை தான் தொலையுது அப்படீன்னா, பேச்சு, நடக்கறது, பாக்கறது எல்லாமே கமல் மாதிரியே பண்ணி அதகளம் பண்ணுவாரு.  இன்னும் கொஞ்சம் மேல போய், கமலுக்கு படத்துல பிரண்ட்ஸ் வருவாங்க பாருங்க, அதே மாதிரியே எங்களையும் ட்ரீட் பண்ணுவாரு.  அவரு கமல்னா நாங்க எல்லாம் அவருக்கு அல்லக்கைங்களாம் .

இப்படிப்பட்ட ரசிகர் இருக்கும் போது, எங்களை பத்தி எல்லாம் நினைச்சு பார்க்காம கமல் 'சலங்கை ஒலி' படம் எடுத்துட்டாரு. அந்த படத்தை கமலுக்காவே ஒரு ஆறு தடவை, அப்புறம் நம்ம கமல் ரசிகருக்காகவே இன்னொரு ஆறு தடவை பார்த்தேன். படம் வந்த நாள்ல இருந்து சூன்யம் வச்ச சூனா தானா மாதிரியே நம்ம ஆளு திரிஞ்சிக்கிட்டு இருந்தாரு.  எப்போ அவரு வீட்டுக்கு போனாலும் கையை வச்சு அபிநயம் எல்லாம் பிடிச்சிக்கிட்டு இருப்பாரு.  எங்களுக்கு கொஞ்சம் திகிலாவே இருந்தது.

ஒரு நாளு ரொம்ப சீரியஸா, "நான் பரதம் கத்துக்க போறேன்" அப்படீன்னாரு. எங்களுக்கு கமலை நினைச்சு கோவப் படறதா, பரதத்தை நினைச்சு வருத்தப் படறதா, எங்களை நினைச்சு நொந்துக்கறதான்னு தெரியலே.  அப்படி, இப்படீன்னு தேடி ஒரு பரத நாட்டிய டீச்சரையும் கண்டு பிடிச்சாரு.  அவங்க அப்பத்தான் கல்யாணமான ஒரு இளம் பெண்.  கிடா மாதிரி வளர்ந்து இருக்குற நம்ம ஆளுக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுக்கறதுக்கு அவங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.  நம்ம கமல் ரசிகரும் நாட்டியம் மட்டுமே வாழ்க்கையினுடைய உயிர் மூச்சா எடுத்துக்கிட்டு கத்துக்கணும்னு கிளம்பிட்டாரு.  எங்களையும் கம்பெனிக்கு கத்துக்க வாங்கடான்னு எவ்வளவோ கேட்டு பார்த்தாரு.  பரதம் மேல எங்களுக்கு ரொம்ப மரியாதையும், எங்க மேல எங்களுக்கே அவ்வளவு நல்ல அபிப்ராயமும் இல்லாததாலே நாங்களும் எஸ்கேப், பரத நாட்டியமும் தப்பிச்சுது.  ஆனா எங்க நட்பு வட்டத்துக்கு வெளியே இருந்து ஒரு பலியாடு வந்து மாட்டிகிச்சு.

அவரும் ஒரு கமல் ரசிகர்.  நம்ம ஆளு ஏத்தி விட்ட ஏத்துல அவரும் களத்துல குதிக்க ரெடி ஆயிட்டாரு. ரெண்டு பேரும் போய் கமல் போட்டு இருந்த மாதிரியே வெள்ளை கலர்ல குர்தா எல்லாம் தைச்சுக்கிட்டு வந்தாங்க.  அதை போட்டுக்கிட்டு ரெண்டு பெரும் கிளாசுக்கு சைக்கிள்ளே டபுள்ஸ் போற அழகே அழகு.  கமலுக்கு சலங்கை ஒலியில சரத் பாபு மாதிரி நம்ம புது நண்பர் நம்ம ஆளுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டாரு.

ஒரு நாளு நம்ம ஆளு வீட்டுல பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாரு. நாங்க எல்லாரும் தான் ஆடியன்ஸ். அப்போ பார்த்து அவங்க மாமா காளஹஸ்தியில இருந்து நம்ம ஆளு வீட்டுக்கு வந்தாரு.  அவங்க பெண்ணை அவரு நம்ம ஆளுக்கு தான் கல்யாணம் கட்டி குடுக்கணும்னு பிளான்ல இருந்தாரு.  நம்ம ஆளு அவங்க மாமா உள்ள வர நேரம் பார்த்து சலங்கை ஒலியில கமல் கல்யாண மண்டபத்துல ஆடுற "பால கணக மய" பாட்டை அப்படியே கமல் மாதிரியே தன்னை மனசுல நினைச்சுக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தாரு.  மாமா கதவை தொறந்துக்கிட்டு உள்ள வர்ற நேரம் பார்த்து காசட்ல ஜானகியம்மா, "ரா ரா...ரா ரா..." அப்படீன்னு உருகி உருகி பாடுற லைன்.  நம்ம ஆளு அதுக்கு கரெக்டா கதவை பார்த்து அபிநயம் பிடிக்கிறாரு.  உள்ள வந்த மாமாவை பார்த்து "ரா..  ரா.." (தெலுங்குல 'வாடா...')  அப்படீன்னு கூப்பிடுற மாதிரியே இருந்துச்சி.  மாமா அப்படியே ஆப் ஆயி, மருமகனுக்கு என்ன ஆச்சோ தெரியலயேன்னு முழிக்கிறாரு.  மாமாவை பார்த்ததும் நம்ம ஆளும், டர் ஆயி, அப்படியே ஸ்டில் ஆயிட்டாரு.  கொஞ்ச நேரம் ஒரு இனம் புரியாத அமைதி. நாங்களும் நைசா வெளிய வந்துட்டோம்.

வெளிய வந்ததும் நம்ம NP சொல்றாரு, "அவங்க மாமா அவரு பொண்ணுக்கு வேற பைய்யன பார்பாருன்னு தான் எனக்கு தோணுது" அப்படீன்றான்.

ஆனா நல்ல காலம் சலங்கை ஒலிக்கு அப்புறம் கமல் வேற படங்கள் நடிச்சதால, நம்ம ஆளும் கேரக்டரை மாத்திக்கிட்டாறு, நாங்களும் தப்பிச்சோம், பரத நாட்டியமும் பொழைச்சுது, அவங்க மாமாவும் அவரு பெண்ணையே நம்ம ஆளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாரு.

ஆனா ஒண்ணுங்க, அந்த பாட்டு ஒரு எவர் கிரீன் கிளாசிக்.  இளையராஜாவின் இசையும், கமலும், மஞ்சு பார்கவியும் ஆடுறதும், ஜெயப்ரதா ஒளிஞ்சு இருந்து கமலை போட்டோ பிடிக்கறதும், அவங்க அம்மா அப்பாவியா உக்காந்து பார்குறதும், அடேங்கப்பா... கே விஸ்வநாத் திரையில காவியம் படைச்சு இருப்பாரு.  ஏன் கமலுக்கு வெறி பிடிச்ச ரசிகர்கள் இருக்காங்க அப்படீன்றதுக்கு இந்த பாட்டு ஒரு சோறு பதம்.  நீங்களும் ஒரு தடவை அந்த பாட்டை பாருங்க, கமலை உங்களுக்கு இன்னும் பிடிக்கும்.


No comments:

Post a Comment