Saturday, November 19, 2011

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே....

தலைப்பை பார்த்ததும் நண்பர்களை பத்தி இருக்குமோ அப்படீன்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞாணியாவோ, ஆல் இன் ஒன் அழகு ராஜா அறிஞராவோ தான் இருக்கோணும்.

அள்ள அள்ள குறையாது நண்பர்களோட கழிச்ச அந்த நாளின் நினைவுகள்.  இனி வரும் பதிவுகள்ள கொஞ்சம் சொரண்டி பாக்குறேன்.  எத்தனை நாள் தான் திரும்பி பாக்குறது.

நாங்க பசங்க ஒரு ஆறு பேர்.  அதோட எங்க வகுப்பிலேயே படிச்ச பொண்ணுங்க ஒரு நாலு பேர். எல்லாரும் ஆறாம் வகுப்புலே இருந்து ஒன்னா குப்பை அள்ளுனவுங்க (எத்தனை நாளைக்கு தான் கொட்டறது).  நாங்க எல்லாம் ஒரு மார்கமான குரூப்பு.  பொண்ணுங்க எல்லாம் ஏதோ பரிதாபப் பட்டு எங்களையும் மனுச பயலுவளா மதிச்சு குரூப்புல இருந்தாங்க.  ஆனா நாங்க ஆறு பசங்க இருந்தோமே, (இன்னும் இருக்கோம், ஒவ்வொருத்தன் உலகத்துல ஒவ்வொரு மூலையில).  ஏதோ இயற்கையே (நமக்கு கடவுள் எல்லாம் கிடையாதுங்க) எங்க ஆறு போரையும் பெவிகால் போட்டு ஒன்னா ஒட்டி, சிவாஜி பாசமலர் தங்கைய வாழ்த்தி அனுப்புன மாதிரி, ஏழேழு ஜன்மத்துக்கும் இணைபிரியாம இருங்கன்னு கண் கலங்குன கதையா ஒன்னு மன்னா தான் திரிவோம்.

இப்போ எங்க ஒவ்வொருத்தரை பத்திய பேக்கிரவுண்டு, front,  சைடு கிரவுண்டு எல்லாம் சொன்னா தான் உங்களுக்கு நாங்க வாழ்ந்த வாழ்க்கைய அப்படியே பாரதிராசா படம் பார்த்தாப் போல பார்க்க தோணும்.  கர்சீப்பை ரெடியா வச்சுக்குங்க. படிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு நிச்சயம் கண் கலங்கும். அது காமெடியால இருக்கலாம் இல்லேன்னா கடுப்புலே கூட இருக்கலாம்.

எங்க ஆறு பேருல, ரெண்டு பேரு கமல் ரசிகர்கள், ஒருத்தர் ரஜினி, ஒருத்தர் பாக்கியராஜ் (ஹலோ நிஜமா தாங்க), ஒருத்தர் சிவாஜி.  இன்னும் ஒருத்தர் நியுட்ரல் பார்ட்டி.  ஆனா அந்த தகுதிய வச்சுக்கிட்டே எல்லாரையும் கலாய்ப்பாரு  அவுரு.

எங்களுக்குள்ள எழுதப்படாத விதி என்னன்னா (சேர்ந்ததே விதி தான், அதுல இது வேறயான்னு கேக்கப்படாது), ரஜினி படம் வந்தா ரஜினி ரசிகர் தான் எல்லாருக்கும் படம் பார்க்க ஸ்பான்சர் பண்ணுவாரு.  அது போல மத்தவங்க.  இந்த முறையில ஒரு தடவை ஐயா சிவாஜி நடிச்ச ஒரு படம் வெளி வந்தது. "யோவ் நீ சொல்றதை பார்த்தா நீ இப்போ பெருசு தானே?" அப்படீன்னு யாருங்க சீட்டு எழுதி அனுப்பி இருக்கறது?  கமல் சொன்ன மாதிரி அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.  படம் முதல் நாள் முதல் ஷோ.  நாப்பது, ஐம்பது வயசு பெருசுங்க (அப்பவே) ஒரு நாலு கூடை உதிரி பூவை எடுத்துக்கிட்டு சினிமா கொட்டாய்குள்ளே வந்து ஐயா சிவாஜி வந்தவுடனே ஸ்க்ரீன்ல பூவை போட்டு, விசில் அடிச்சு, டயர்ட் ஆயி (வயசாச்சு இல்லே) உக்காந்துட்டங்க.  படத்துல ஒரு சீன்ல அப்போதைய குழந்தை நடிகை ஒருத்தர், டிவில ஒரு சீனை பார்த்துட்டு "ஐ" அப்படீன்னு குதிப்பாங்க.  அப்போ பார்த்து நம்ம நியுட்ரல் பார்ட்டி, பேபி ஷாலினி மாடுலேஷன்லேயே ஒரு கமெண்ட்டை போட, முன்னாடி உக்கார்ந்து இருந்த ரசிக கண்மணிங்க எல்லாம் எழுந்து "ஏய், யார்ரா, யார்ரா அதுன்னு" எழுந்தாங்க பாருங்க.  எங்க ஆறு நாடியும் (ஏழு பேரு இருந்தா தானே சப்த நாடி), ஒடுங்கி போய், குனிஞ்சு உக்காந்துகிட்டோம்.  படம் முடிஞ்சு (விட்டாப் போறோம்னு) வெளிய நாங்க அழுதுக்கிட்டே வந்தோம்.  (ஹலோ மிஸ்டர் யாருக்கும் அடியெல்லாம் கிடையாது).  நம்ம சிவாஜி ரசிகர் வீடு வரைக்கும் கர்சீப்பை பிழிஞ்சிக்கிட்டே வந்தார்.  "சரி உடுறா, எப்பவாவது இந்த மாதிரி நமக்கு சோதனை வர தான் செய்யும், அதுக்காக அழப்படாது" அப்படீன்னு சொன்னா இன்னும் ஓவரா தேம்பி தேம்பி அழுதான்.  "ஏண்டான்னு?" கேட்டா, "டேய், எப்படிரா இப்படிப்பட்ட ஒரு படத்தை பார்த்து அப்படி சொல்லிட்டீங்க? அண்ணன் நடிப்பை பார்த்து எத்தனை பொம்பளைங்க அழுதாங்க தெரியுமா?  ச்சே உங்களோட இனிமே அண்ணன் படத்துக்கு வர மாட்டேண்டா.  இனிமே உங்க கிட்ட பேச மாட்டேண்டா" அப்படீன்னுட்டு விறு விறுன்னு போய்க்கிட்டே இருந்தான்.

நம்ம நியுட்ரல் பார்ட்டி, "விடுங்கடா, எப்பவும் ஒரு சோதனை வந்தா,  பின்னாடியே ஒரு நல்லது நடக்கும்னு"  சீரியஸா மூஞ்சிய வச்சுக்கிட்டு சொல்றான். 

   


2 comments:

  1. என்ன தொடருமா? இல்லை ஒரு பேச்சிக்கு கேட்டேன்

    ReplyDelete